சித்தன்கேணி ஆலய வளாகத்தில் வாள்வெட்டு- சந்தேக நபர் தலைமறைவு!
யாழ்ப்பாணம் சித்தன்கேணி ஆலய வளாகத்தினுள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
சித்தங்கேணி சிவன் கோவில் நிர்வாகத்துடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்தே வளாகத்தில் நேற்றைய தினம் வாள்வெட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
ஆலய நிர்வாகத்தில் உள்ள ஒருவருக்கும், மற்றுமொருவருக்கு ஆலயம் தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வாய்த்தர்க்கம் முற்றியதால் ஆலய நிர்வாகத்தை சேர்ந்தவரை மற்றைய நபர் தன் உடமையில் மறைத்து வைத்திருந்த வாளினால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.
அவ்வாறு தப்பியோடும் போது அவர் வைத்திருந்த வாள் தவறி விழுந்துள்ளது. அதனை அங்கிருந்தவர்கள் மீட்டு வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அதேவேளை வாள் வெட்டுக்கிலக்கான நபரையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.