கொழும்பு மாநகர சபையில் ஆட்சி: சஜித் தரப்பு உறுதி
கொழும்பு மாநகர சபை உட்பட ஏனைய மாநகர சபைகளில் எதிர்க்கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பொது இணக்கப்பாட்டுடன் ஆட்சியமைப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா (Harshana Rajakaruna) தெரிவித்தார்.
கம்பஹாவில் (Gampaha) நேற்று (08) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையியே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “நாட்டு மக்கள் பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளார்கள். ஆகவே ஏதும் செய்யலாம் என்ற எண்ணத்தில் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்பட்டது. அதிகாரம் நிலையற்றது என்பதை மக்கள் அரசாங்கத்துக்கு ஜனநாயக ரீதியில் எடுத்துரைத்துள்ளார்கள்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்தின் பின்னடைவை எடுத்துக்காட்டுகிறது. அரசாங்கத்தின் போலியான வாக்குறுதிகளால் ஏமாற்றமடைந்த மக்கள் அரசாங்கத்துக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்கள்.

வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட 161 உள்ளூராட்சிமன்ற அதிகாரசபைகளில் பெரும்பாலான உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளில் ஆட்சியமைத்துள்ளோம்.
மக்களாணையின் அர்த்தம்
எதிர்க்கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பொது இணக்கப்பாட்டுடன் கொழும்பு மாநகர சபை உட்பட ஏனைய மாநகர சபைகளில் ஆட்சியமைப்போம்.

ஊழலை இல்லாதொழிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க முயற்சிக்கிறார்கள். மக்களாணையின் அர்த்தத்தை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        