உச்ச நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்ட மனுஷ மற்றும் ஹரினின் மனுக்கள்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரால் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தில் பதவிகளை ஏற்றுக் கொண்ட காரணத்தால் குறித்த இருவரினதும் கட்சி உறுப்புரிமையை நீக்க கட்சியின் செயற்குழு கடந்த ஜுலை மாதம் 18 ஆம் திகதி தீர்மானித்திருந்தது.
உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்
இந்த தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தும் வகையில் மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் கடந்த ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இருவரினதும் கட்சி உறுப்புரிமை தடை செய்யப்பட்டமை மற்றும் நாடாளுமன்றிலிருந்து நீக்குவதற்கு கட்சி மேற்கொண்ட தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு மனுதாரர்கள் கோரியிருந்தனர்.
வழக்கு விசாரணை
இந்த நிலையில், நீதியரசர்களான விஜித் மலல்கொட, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்தக் கொள்ளப்பட்டது.
இதன் போது, மனுதாரர்களின் கோரிக்கையை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், குறித்த வழக்கு மீதான விசாரணையை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்துள்ளனர்.