மக்கள் போராட்டம் மீதான தாக்குதல்! அரசை குற்றம் சாட்டும் சர்வதேசம்
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளை வன்மையாக கண்டிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறான தாக்குதல்களுக்கும் குற்றங்களுக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் பொறுப்பு கூற வேண்டுமென அந்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரையான காலப்பகுதிக்குள் சுமார் 30 போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
தாக்கப்பட்ட போராட்டக்காரர்கள்
இந்த போராட்டங்களில், சுமார் 17 பேராட்டங்களின் போது சட்ட விரோதமான முறையில், கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டதாகவும் அந்த சபை கூறியுள்ளது.
இதன்படி, கொழும்பு, பத்தரமுல்ல, யாழ்ப்பாணம் மற்றும் காலி ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற போராட்டக்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல்கள் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் காணொளிகளாக தம்மிடம் உள்ளதாக சபை தெரிவித்துள்ளது.
குற்றம்சாட்டும் சர்வதேசம்
இலங்கையில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல்கள், சர்வதேச சட்டங்கள் மற்றும் தரங்களை மீறும் வகையில் அமைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன், போராட்டங்களை முன்னெடுப்பதற்கான உரிமை பொது மக்களுக்கு உண்டு என்பதை குறித்த தரப்பினர் நினைவில் கொள்ள வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபையின் தெற்காசியாவிற்கான பிராந்திய பணிப்பாளர் ஸ்மிரித்தி சிங் தெரிவித்துள்ளார்.
சட்ட நடைமுறை
மேலும், போராட்டக்காரர்களை பாதுகாக்க வேண்டியது சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களின் கடமை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறாக போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்ட காவல்துறையினர் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தரப்பினருக்கு எதிராக இதுவரை எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை இந்த நடவடிக்கை சுட்டிக்காட்டுவதாக ஸ்மிரித்தி சிங் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |