இராணுவத்தை பாதுகாக்கும் அநுர அரசாங்கம்: சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு
யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத்தை காட்டிக் கொடுக்கமாட்டோம் பாதுகாப்போம் என கூறிக்கொண்டு உள்நாட்டில் நீதி வழங்குவோம் என தற்போதைய அரசு கூறுவதை பாதிக்கப்பட்ட மக்கள் நம்பத் தயார் இல்லை என ரெலோவின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பதினாறு ஆண்டுகளாக உள்நாட்டு பொறிமுறையில் ஏமாற்றப்பட்டு நீதியை பலவீனப்படுத்தி குற்றம் இழைத்தவர்களை பாதுகாக்கும் இலங்கை அரசின் நரித்தந்திரத்தை பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயார் இல்லை.
இறுதிப் போரில் சூட்டுத் தவிர்ப்பு வலயங்கள் , மருத்துவ மனைகள், சிறுவர் பாடாலைகள், கஞ்சி வாங்க வரிசையில் நின்றவர்கள், சரணடைந்தவர்களை வலிந்து காணாமல் ஆக்கியமை, சரணடைந்தவர்களை படுகொலை செய்தமை மற்றும் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை படுகொலை செய்தமை போன்ற யுத்தக் குற்றங்கள் உள் நாட்டு சட்டத்தில் விசாரணை செய்ய முடியாது.
குற்றவியல் சட்டங்கள்
அதற்கான குற்றவியல் சட்டங்கள் இலங்கை அரசின் சட்டக் கோவையில் இல்லை.
சர்வதேச குற்றவியல் சட்டங்களின் படி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாகவே விசாரிக்கப்பட வேண்டும் இதுவே பாதிக்கப்பட்ட மக்களினது கோரிக்கையும் ஆகும்.
ஆட்சியாளர்கள்
குற்றம் செய்தவர்களை பாதுகாத்து அவர்களுக்கு உயர் பதவிகளை வழங்கிக் கொண்டு உள் நாட்டு நீதி வழங்குதல் என்பது பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றும் பித்தலாட்ட நாடகம் ஆகும்.
அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) அரசாங்கத்திற்கு மடியில் கனம் இல்லையென்றால் நாட்டை பொருளாதார ரீதியாகவும் நிரந்தர அரசியல் தீர்வின் ஊடாகவும் முன் கொண்டு செல்ல பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் கடந்தகால ஆட்சியாளர்கள் போன்ற தோல்வி முகத்தினை சந்திக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
