இலங்கையின் பொருளாதார நெருக்கடி : நிறைவடையவுள்ள விசாரணைகள்!
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகள் எதிர்வரும் மார்ச் மாதம் நிறைவடையவுள்ளதாக அந்த குழுவின் தலைவரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்த குழுவின் விசாரணை நடவடிக்கைகளின் போது பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலங்கள் தொடர்பில் பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொண்டதன் பின்னர், குறித்த விசாரணைகள் முடிவுக்கு கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சாகர காரியவசம் தலைமையில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவால் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் மற்றும் அவற்றை சரி செய்வதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு இந்த குழுவுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், பொருளாதார நெருக்கடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய அனைத்து தரப்பினர் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
விசாரணைகள்
இதன்படி, மத்திய வங்கியின் தற்பேதைய மற்றும் முன்னாள் ஆளுநர்கள், நிதி அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறாக விசாரணைக்குட்படுத்தப்பட்ட தரப்பினரின் வாக்குமூலங்கள் பொருளாதார நிபுணர்களால் ஆராயப்பட வேண்டுமெனவும் இது தொடர்பான ஆலோசரனைகள் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் குறித்த விசாரணை நடவடிக்கைகள் நிறைவுக்கு கொண்டு வரப்படும் எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |