இந்தியாவின் இராஜதந்திர ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இலங்கை - இந்தியா பாதுகாப்பு ஒப்பந்தங்கள்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், வான் பாதுகாப்புத் திறன் மேம்பாடு, இராணுவக் கல்வி மற்றும் இளைஞர் ஒத்துழைப்பு ஆகிய துறைகளை உள்ளடக்கிய மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
கொழும்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
இதன் கீழ், இலங்கை விமானப்படையிடம் உள்ள ஆறு 40 மில்லிமீற்றர் எல்70 ரக வான் பாதுகாப்புப் பீரங்கிகளை நவீனமயப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் மானிய உதவி வழங்கவுள்ளது. மேம்படுத்தப்படும் இந்த அமைப்புகள், முக்கிய தேசிய சொத்துக்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், இலங்கையின் ஒட்டுமொத்த வான் பாதுகாப்புத் திறனையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இராணுவக் கல்வி - நிறுவன ஒத்துழைப்பு
இலங்கை விமானப்படைக்கு இந்தியா முன்னதாக 24 எல்70 ரக வான் பாதுகாப்பு அமைப்புகளை 2000 முதல் 2006ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வழங்கியிருந்தது.

அவற்றில் 18 அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளையும் இந்தியா ஏற்கனவே மேற்கொண்டுள்ளது. தற்போது எஞ்சியுள்ள ஆறு அமைப்புகளையும் நவீனமயப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
இரண்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கும் இலங்கையின் தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கும் இடையிலான கல்விசார் ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது.
இதன் மூலம் இரு நிறுவனங்களுக்கிடையே அறிவுப் பரிமாற்றம், நிபுணத்துவப் பகிர்வு மற்றும் தேசிய பாதுகாப்பு, மூலோபாய விவகாரங்கள் தொடர்பான கல்விசார் கலந்துரையாடல்களுக்கு அதிக வாய்ப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக இலங்கையைச் சேர்ந்த மூத்த இராணுவ அதிகாரிகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பயிற்சிகளையும் கற்கைநெறிகளையும் மேற்கொண்டு வருகின்ற நிலையில், புதிய ஒப்பந்தம் இந்த நிறுவன ரீதியான உறவை மேலும் விரிவுபடுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
நல்லிணக்கத்தை உள்ளடக்கிய சீர்த்திருத்தமே தொடர்கிறது! ஐ.நா. மனித உரிமைகள் சபையிடம் இலங்கை சுட்டிக்காட்டு
இளைஞர் உறவுகளுக்கு புதிய வாய்ப்பு
மூன்றாவது புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய தேசிய மாணவர் படைக்கும் இலங்கை தேசிய மாணவர் படைக்கும் இடையிலான ஒத்துழைப்பை முறைப்படுத்துகிறது.
இதன் மூலம் இரு நாடுகளின் இளைஞர்களுக்கிடையிலான பரிமாற்றங்கள், கலாசாரப் புரிந்துணர்வு, அறிவுப் பகிர்வு மற்றும் பயிற்சி வாய்ப்புகள் மேலும் விரிவடையும்.
குறிப்பாக, இலங்கை மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவர்கள் ஆண்டுதோறும் இந்தியாவுக்குச் சென்று தேசிய மாணவர் படை நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்புகளும் இந்த ஒத்துழைப்பின் ஊடாக வலுப்படுத்தப்படவுள்ளன.
இந்த மூன்று ஒப்பந்தங்களும் இந்தியா–இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு இராணுவ நடவடிக்கைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், தொழில்முறை கல்வி, திறன் மேம்பாடு மற்றும் இளைஞர் உறவுகள் உள்ளிட்ட பரந்த துறைகளுக்கு விரிவடைந்து வருவதை வெளிப்படுத்துகின்றன.
குறிப்பாக, இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்பு இரு நாடுகளுக்கும் முக்கிய முன்னுரிமையாகத் தொடர்கிறது.
முக்கிய சர்வதேச கடல்சார் போக்குவரத்து வழித்தடங்களுக்கு அருகில் இலங்கை அமைந்துள்ளதால், பிராந்திய கடல்சார் பாதுகாப்பில் இலங்கை இந்தியாவுக்கு முக்கிய பங்காளியாகக் கருதப்படுகிறது.
இதனிடையே, இந்தியாவும் இலங்கையும் 2025 ஏப்ரல் மாதத்தில் ஐந்தாண்டு காலத்துக்கான விரிவான பாதுகாப்பு ஒத்துழைப்பு கட்டமைப்பொன்றை உருவாக்கியிருந்தன.
கூட்டு இராணுவப் பயிற்சிகள், திறன் மேம்பாடு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம், கடற்படைத் துறைமுகப் பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இதில் உள்ளடங்குகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |