சுதந்திர தின கொண்டாட்டத்தில் சரிந்து வீழ்ந்த மாணவர்கள் - கண்டுகொள்ளாத இராஜாங்க அமைச்சர்!
வவுனியாவில் இன்று இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் இசை அணிவகுப்புக்காக சென்றிருந்த மாணவர்கள் நீண்ட நேரமாக வெயிலில் நிற்க வைக்கப்பட்டமையால், மாணவர்கள் மயங்கி விழுந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதன்போது, அதிகாரிகள் பாராமுகமாக செயற்பட்டமை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வவுனியா நகரசபை மைதானத்தில் சிறிலங்காவின் சுதந்திரதின நிகழ்வுகள் இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகின.
அணிவகுப்பு
இதன்போது பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் கலந்து கொண்டிருந்தார். இதன்போது, காவல்துறையினர் மற்றும் குடிசார் பாதுகாப்பு படைகளின் அணிவகுப்போடு வவுனியா பாடசாலை மாணவர்களின் இசை அணிவகுப்பும் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதுடன், அதிகளவான நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் பாடசாலை மாணவர்களை மைதானத்தில் வெயிலின் மத்தியில் நிறுத்தி அனைத்து நிகழ்வுகளையும் நடத்தியதுடன் அதிதிகள் உட்பட அரச அதிகாரிகள் கொட்டகைகளுக்குள் வெயில்படாத வகையில் அமர்ந்திருந்து நிகழ்வுகளை பார்வையிட்டனர்.
மயங்கி விழுந்த மாணவர்கள்
இதன்போது சுமார் 25 இற்கும் அதிகமான மாணவர்கள் மயங்கி விழுந்த நிலையில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் முதலுதவி அணியினர் முதலுதவி வழங்கியிருந்தனர்.
கண்டுகொள்ளாத மஸ்தான்
இசை அணிவகுப்புக்காக சென்ற பாடசாலை மாணவர்கள் மயங்கி விழுவதை அதிதியாக கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு ஊடகவியலாளர்கள் கொண்டு சென்ற போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமையால் மேலும் பல மாணவர்கள் மயங்கி விழுந்தமை பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.













