கொழும்பில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள பாரிய ஆர்ப்பாட்டம்!
இலங்கையிலுள்ள பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது.
தேசிய வள பாதுகாப்பு இயக்கத்தினால், கொழும்பு கோட்டை லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் நண்பகல் 12 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த அந்த இயக்கம் திட்டமிட்டுள்ளது.
மின்சார சபை, தொலைத்தொடர்பு நிலையம், காப்புறுதி நிறுவனம், தபால் நிலையங்கள், வங்கிகள், விமான நிலையங்கள் மற்றும் பல முக்கிய பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் பொறுப்பற்ற திட்டத்திற்கு எதிராக தேசிய வள பாதுகாப்பு இயக்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு
அரசாங்கத்தின் இந்த விற்பனை நடவடிக்கை தேசிய பாதுகாப்பு, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் இலங்கையர்களின் வாழ்வாதாரத்திற்கு நேரடி அச்சுறுத்தலாக அமைந்துள்ளதென அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மையை ரணில்-ராஜபக்ச அரசாங்கம் அச்சுறுத்தலுக்குட்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் சொத்துக்கள்
அத்துடன், இலங்கையின் சொத்துக்களுக்கு இந்தியா மற்றும் சீனாவுக்கு உரிமை வழங்கும் நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக தேசிய வள பாதுகாப்பு இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்த நடவடிக்கைகளை அரசாங்கம் எதிர்த்தாலும், தமது இயக்கத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை யாராலும் எதிர்க்க முடியாதென அந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |