இந்தியர்களுக்கு அடிக்கவுள்ள அதிர்ஷ்டம்: 3000 பேருக்கு வழங்கப்படவுள்ள பிரித்தானியா விசா
பிரித்தானியா அதன் இந்திய இளம் வல்லுநர்கள் திட்டத்தின் (India Young Professionals Scheme) கீழ் இந்திய நாட்டினருக்கு 3,000 விசாக்களை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விசாக்களை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பதாரர்கள் Ballot System-ல் பங்கேற்க வேண்டும், அதாவது இது ஒரு லொட்டரி குலுக்கல் போல, விண்ணப்பிக்க அனுமதிக்கப்படும்.
2 நாட்களில் (48 மணிநேரம்) மின்னஞ்சல் மூலம் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அதிலிருந்து 3000 பேரை பிரித்தானிய அரசு தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விசா வழங்கப்படும்.
விண்ணப்பங்கள்
இந்த புதிய திட்டத்தின் மூலம் இந்திய பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகள் வரை பிரித்தானியாவில் வசிக்க, வேலை செய்ய அல்லது படிக்க வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.
முற்றிலும் இலவசமான இந்த திட்டத்திற்கு விண்ணப்பதாரர்கள் பெப்ரவரி 20 மதியம் 2:30 PM IST முதல் 22 பெப்ரவரி 2:30 PM IST வரை தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும்.
இது தொடர்பான விவரங்களை இந்தியாவில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் தமது உத்தியோகபூர்வ கணக்கின் மூலம் பகிர்ந்துள்ளது.
அத்தோடு, குறித்த பதிவில் பிரித்தானியாவில் புதிய வாழ்க்கையை தேட ஆர்வமுள்ள இந்திய பட்டதாரிகள் தங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிகரமான உள்ளீடுகள்
பிரித்தானிய அரசாங்க இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, இந்த இடங்கள் பெரும்பாலானவை பெப்ரவரி வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படுமெனவும் மீதமுள்ளவை ஜூலை வாக்கெடுப்பில் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் Ballot-ல் நுழைந்தவுடன், வெற்றிகரமான உள்ளீடுகள் தேர்ந்தெடுக்கப்படும்.
நீங்கள் அதிர்ஷ்டசாலிகளில் ஒருவராக இருந்தால், விண்ணப்பப் பதிவு முடிந்த 2 வாரங்களுக்குள் உங்கள் வெற்றியை உங்களுக்குத் தெரிவிக்கும் மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.
அதன்பின்னர், நிகழ்நிலையின் மூலம் விசாவிற்கு விண்ணப்பிக்க உங்களுக்கு 90 நாட்கள் இருக்கும்.
விசா விண்ணப்ப செயல்முறையின் போது £298 கட்டணம் செலுத்த வேண்டும், இது விசா விண்ணப்பம் மற்றும் குடிவரவு சுகாதார கூடுதல் கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |