தனியார் வகுப்பில் கசிந்த அரச பரீட்சை வினாத்தாள்கள் - வலுக்கும் சிஐடி விசாரணை..!
மூன்றாம் தவணை பரீட்சை பாடங்கள் தொடர்பாக தயாரிக்கப்பட்ட வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் முன்கூட்டியே வெளியேறியமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் அமரசிறி பியதாசவின் பணிப்புரையின் பேரில் மத்திய மாகாண பாடசாலைகளுக்கான மாகாண கல்வி திணைக்களம் இது குறித்து விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
10 மற்றும் 11 ஆம் ஆண்டுகளின் சமயம், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதிபர் மூலமாக கசிந்திருக்கலாம்
வத்தேகம கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் வெளியாகிய குறித்த வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் பாடசாலை மாணவர்களிடையே வட்ஸ்அப் தொழிநுட்பத்தினூடாக பரிமாறப்பட்டு வந்ததுள்ளது.
மேலும் குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் ஆங்கில வினாத்தாளில் குறித்த விடைகளை எழுதும் போது ஆசிரியரிடம் சிக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.
மூன்றாம் தவணைப் பரீட்சை ஆரம்பிக்கப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் மத்திய மாகாணத்தில் உள்ள 1500 பாடசாலைகளின் அதிபர்களுக்கு வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டதுடன், வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் ஏதேனும் அதிபர் மூலமாக கசிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தனியார் வகுப்பு
மேலும் இது தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியிடப்பட்டதன் பின்னணியில் ஆசிரியர் சேவையில் ஈடுபடும் தனியார் வகுப்புகளை நடத்துபவர் ஒருவர் இருப்பதாக சந்தேகிப்பதாகத் தெரிவித்த கல்விப் பணிப்பாளர், எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள பாடங்கள் தொடர்பான வினாத்தாள்கள் வெளியாகும் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
