சீனாவை ஆதரிக்கும் இலங்கை! ஐ.நா அமர்வில் பகிரங்க அறிவிப்பு
சீனாவின் “ஒரே சீனா“ கொள்கைக்கு இலங்கை ஆதரவளிப்பதாக ஐ.நா மனித உரிமை பேரவையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி சுபாஷினி அருணதிலக தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இறையாண்மையுடைய எந்தவொரு தேசத்தினதும் உள்ளக விவகாரங்களில் பிற தரப்பினரால் ஏற்படுத்தப்படும் தலையீடுகளை ஏற்றுக் கொள்ளவோ பொறுத்துக் கொள்ளவோ முடியாது என பேரவையின் 55 ஆவது அமர்வில் உரையாற்றிய ஹிமாலி சுபாஷினி அருணதிலக கூறியுள்ளார்.
இலங்கை தொடர்பில் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முற்றாக நிராகரிப்பதாகவும், இலங்கை விவகாரத்த்தில், பேரவை செயல்படும் விதம் பொறுத்தமற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேரவைக்கு ஆதரவளிக்கும் இலங்கை
எனினும், இலங்கைக்கு நன்மையளிக்கக் கூடியதும், ஏற்புடையதுமான பேரவையின் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஹிமாலி சுபாஷினி அருணதிலக உறுதியளித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் இடம்பெறக்கூடிய மனித உரிமை மீறல் தொடர்பான குற்றங்கள் குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளின் இயலுமை மற்றும் செல்வாக்கு என்பவற்றுக்கு அப்பாற்பட்டு நியாயமான முறையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது இலங்கையின் நிலைப்பாடு என அவர் கூறியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலக்குகள்
அத்துடன், அரசியல் மயப்படுத்தப்படல் மற்றும் துருவமயப்படுத்தப்படல் போன்ற காரணிகளால் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அதன் உண்மையான இலக்குகளை அடைந்து கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்படும் என ஹிமாலி சுபாஷினி அருணதிலக எச்சரித்துள்ளார்.
பேரவையின் கொள்கைகளுக்கு அமைவாக, தேசிய ரீதியிலான சவால்கள் மற்றும் பிரச்சனைகளைக் கருத்திற் கொண்டு மனித உரிமை மீறல்கள் தொடர்பான நடவடிக்கைகள முன்னெடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
உலகின் தென்பகுதியில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம் செலுத்தும் ஐ.நா மனித உரிமை பேரவை, ஏனைய பகுதிகளில் இடம்பெறும் மீறல்கள் தொடர்பில் பாராமுகமாக இருப்பது ஏற்புடையதல்ல என ஹிமாலி சுபாஷினி அருணதிலக கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |