தனியார் வரிக்கோவையை அதிகரிக்க திட்டம்
நாட்டில், தற்போது 05 இலட்சமாக காணப்படும் தனியார் வரிக் கோவை எண்ணிக்கையை இவ்வருடத்தில் 10 இலட்சமாக அதிகரிக்கும் இலக்கை,தேசிய வருமான வரி திணைக்களத்துக்கு நிதி அமைச்சு வழங்கியுள்ளது.
தற்போது காணப்படும் 05 இலட்சத்து 196 தனியார் வரிக் கோவை எண்ணிக்கையை 01 மில்லியனாக அதிகரிக்கும் இவ்விலக்கை அத்திணைக்களத்துக்கு வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
வருமானவரி வழங்குவதற்காக பதிவு செய்யப்பட்டுள்ள வரிக்கோவை எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம், வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
வரிச்சுமை
உரிய முறையில் வரியை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் வரிச்சுமை குறைவடையும் அதேவேளை, வரி அடிப்படையை விரிவுபடுத்த முடியுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டு 17 இலட்சமாக தனியார் வருமான வரி கோவைகள் இருந்துள்ளது. இது 2021ஆம் ஆண்டு 05 இலட்சத்து 70 ஆயிரமாகக் குறைந்துள்ளது.
அதேவேளை 2022 ஆம் ஆண்டு 02 இலட்சத்து 04 ஆயிரத்து 467 ஆக இது குறைவடைந்துள்ளது. எனினும் 2023ஆம் ஆண்டு மீண்டும் அது 05 இலட்சம் வரிக்கோவையாக அதிகரித்துள்ளது.
பாரிய இலக்கு
அதற்கிணங்க இந்த வருடத்தில் அந்த வரிக்கோவை எண்ணிக்கையை 10 இலட்சமாக அதிகரிப்பதற்கு புதிய தேசிய வருமானவரி ஆணையாளர் சேபாலிகா சந்திரசேக்கர தலைமையிலான வருமானவரி திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு, பாரிய இலக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |