ரணிலின் இரட்டை முக நடத்தை! சர்வதேச உதவிகளுக்கு ஆபத்து என்கிறார் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான கைது நடவடிக்கைகள் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளால் சர்வதேச நாடுகளின் உதவிகளை இழக்கவேண்டிய நிலை ஏற்படுமென கொழும்பில் நேற்று(21) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
இரட்டை முக நடத்தை
“அவசரகாலச் சட்டத்தை இனிமேலும் கடைப்பிடிக்கப் போவதில்லை என புதிய அதிபர் அண்மையில் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்திற்குப் பிறகு, 7 மாவட்டங்களுக்கு பாதுகாப்புப் படையினரை பிரசன்னமாக்கும் அதிகாரம் வழங்கி வர்த்தமானி வெளியிடப்பட்டது. இது இரட்டை முக நடத்தை இல்லையா?
புதிய அதிபர் நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக இருந்த போது சர்வதேச நாடுகளிடம் சென்று பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம் என கூறியிருந்தார். ஆனால் இன்று அவர் என்ன செய்கிறார்.
கேவலமான முறையில் பல்கலைக்கழக மாணவர் அமைப்புகளின் தலைவர்களை வேட்டையாடுவதற்கு இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது. பல்கலைக்கழக மாணவர் அமைப்புகளின் தலைவர்கள் இன்று வேட்டையாடப்படுகிறார்கள். நாளை தொழிற்சங்கங்கள் வேட்டையாடப்படும். அடுத்து விவசாய அமைப்புகள், மீனவ சங்கங்கள் வேட்டையாடப்படும்.
எதேச்சதிகார ஆட்சியின் அடையாளங்கள்
இந்நாட்டு அப்பாவி மக்கள் தாங்கள் படும் துன்பங்களை நினைத்து கோஷமெழுப்ப முடியாத எதேச்சதிகார ஆட்சியின் அடையாளங்கள் மேலெழுவதை இன்று எம்மால் தெளிவாகக் காண முடிகிறது.
விரைவில் மனித உரிமைகள் ஆணைக்குழு கூடவுள்ளது. அவர்களுக்கு முன் நாம் பதில் சொல்ல வேண்டும். இவை நமது பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் விளைவுகளைப் பாருங்கள். இது ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல, நாட்டின் பொருளாதார நிலையையும் பாதிக்கிறது.
ஜி.எஸ்.பி இழப்பால் எமது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு என்னவென்று ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள். இவற்றிலிருந்து முறையாக எவ்வாறு விடுபடுவது என்பது குறித்து சிந்திக்க வேண்டுமல்லவா? இவ்வாறு பயணித்து இப்போது இந்த நாட்டை எங்கே கொண்டு செல்லப்போகிறோம்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

