வெள்ளத்தால் தனிமைப்படுத்தப்பட்ட தமிழர் கிராமம்! (படங்கள்)
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிராட்டிகுளம் கிராமம் வெளித்தொடர்புகள் இன்றி வெள்ளத்தினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
பறங்கியாறு பெருக்கெடுத்திருப்பதால் வெளி பிரதேச தொடர்புகள் எதுவுமின்றி குறித்த கிராமம் பாதிப்படைந்துள்ளது.
இதேவேளை வீடுகளினுள் வெள்ளநீர் மற்றும் ஆற்று நீர் புகுந்துள்ளமையினால் வீடுகளில் கூட உணவுகளை தயார் செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களின் அவல நிலை
குறித்த பிரதேசத்தில் வர்த்தக நிலையங்கள் இல்லாத நிலையில் 7,8 கிலோமீற்றர் தூரமுள்ள நட்டாங்கண்டல் பிரதேசத்திற்கு சென்றே பொருட்களை கொள்வனவு செய்யவேண்டும்.
பறங்கியாறு பெருக்கெடுத்து குடிமனைக்குள்ளாக பாய்வதால் வைத்தியசாலைக்கு கூட செல்லமுடியாத நிலைமை காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
கால்நடைகள் கூட வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும் , சிலவற்றை இறந்த நிலையில் மீட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
வெளித்தொடர்புகள் இல்லை
சிறு குழந்தைகளுடன் வாழ்ந்துவரும் நிலையில் வீடுகளில் தண்ணீர் தேங்கி வீடுகளைவிட்டு வெளியேற வேண்டிய சூழலில் தாம் இருப்பதாக தெரிவித்த அவர்கள் , வீடுகளும் இடிந்துவிழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சிராட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவில் 67 குடும்பங்களை சேர்ந்த 197 பேர் வசித்துவரும் நிலையில் குறித்த குடும்பங்கள் வெள்ளத்தினால் வெளித்தொடர்புகள் எதுவுமின்றி நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த 17 ம் திகதி மாலை 4 மணி வரை மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிலே அம்பாள்புரம், கரும்புள்ளியான், ஒட்டறுத்தகுளம், நட்டாங்கண்டல், பாண்டியன்குளம், செல்வபுரம், பாலிநகர், சிராட்டிகுளம், சிவபுரம், மூன்றுமுறிப்பு,பூவரசங்குளம்,விநாயகபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 284 குடும்பங்களை சேர்ந்த 946 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |