வெளிநாடு செல்லவுள்ள இலங்கையர்களுக்கான கடவுச்சீட்டு : வெளியான தகவல்
கடவுச்சீட்டு தட்டுப்பாடு தொடருமானால், இலங்கையர்கள் பணி நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கான உத்தரவை அரசாங்கம் இதுவரை வழங்காத காரணத்தினால் இந்த நிலை உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (Sri Lanka Foreign Employment Agency) தெரிவித்துள்ளது.
அதிகளவான கடவுச்சீட்டு
எதிர்வரும் சில வாரங்களில் நடைபெறவுள்ள கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இலங்கையர்களிடமிருந்து அதிகளவான கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் குவியும் எனவும், கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சையில் தோற்றுவதற்கு கடவுச்சீட்டு இலக்கத்தை வழங்குவது கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அடுத்த சில வாரங்களில் சுமார் 30,000 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விரும்பும் இலங்கையர்கள்
வேலைக்காக வெளிநாடு செல்ல விரும்பும் இலங்கையர்கள் கடவுச்சீட்டு பெறுவதில் தொடர்ந்தும் சிக்கல்கள் ஏற்படுமானால், இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் வேறு நாடுகளுக்கு திருப்பி விடப்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கான புதிய விண்ணப்பங்களுக்கு ஐந்து மாத காலத்தின் பின்னரே நேரம் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்து.
மேலும், தற்போதைக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கு எதிர்வரும் மே மாதம் ஒன்பதாம் திகதிக்குப் பின்னரான திகதிகளே ஒதுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |