உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் - நிலைப்பாட்டை வெளியிட்டது மைத்திரி அணி
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையால் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது.
குறித்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பங்காளி கட்சியின் தலைவராகவும், அமைச்சரவை உறுப்பினராகவும் இருக்கும் உதய கம்மன்பிலவை இந்த நேரத்தில் ஒரு கட்சியை சேர்ந்தவராகவே பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவே மைத்திரி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடு என குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, கடந்த வியாழக்கிழமை மாலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அக்கட்சியின் தலைவரான முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போது இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.