மூத்த தலைவர்களுக்கு அதிரடி கொடுக்கத் தயாராகும் மைத்திரி தரப்பு
மூத்த தலைவர்களை நீக்க திட்டம்
சிறிலங்கா சுதந்திர கட்சியின் பல சிரேஷ்ட தலைவர்கள், அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களில் இருந்து நீக்கப்படவுள்ளதாக கட்சியின் மூத்த துணைத் தலைவரான ரோஹண லக்ஸ்மன் பியதாச கூறியுள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றவர்களை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்குவது குறித்து கட்சி ஆலோசித்து வருவதாகவும் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களான மஹிந்த அமரவீர மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் ஏற்கனவே அமைச்சரவைப் பதவிகளை வகித்து வருகின்றனர்.
தடை உத்தரவு
இதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் லசந்த அழகியவன்ன மற்றும் உப செயலாளர்களான ஜகத் புஸ்பகுமார மற்றும் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் அண்மையில் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினர் அரசாங்கத்தில் பதவிகளை ஏற்க விரும்பாவிட்டாலும், பல மூத்த உறுப்பினர்கள் பதவிகளைப் பெற்று மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று வெளிப்படையாக கூறிவருகின்றனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களை கட்சியில் அவர்கள் வகிக்கும் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே கட்சியின் விதிகளை மீறிச் செயற்பட்ட கட்சியின் மூத்த தலைவர்களை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்குவதற்கு கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேனவும் தயாராகிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
