சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் அடித்துக் கொலை: விசாரணைகள் தீவிரம்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) காலி ஹினிதும தொகுதியின் பிரதான அமைப்பாளராக இருந்த ஒருவர் வீட்டில் வைத்து அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மீகொட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு (Colombo) - ஹோமாகம பனாகொட சமகி மாவத்தை பகுதியைச் சேர்ந்த சம்பத் கமகே என்ற வர்த்தகரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
கொலைசெய்யப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் கொலை செய்யப் போவதாக தொலைபேசியில் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
நேற்று (17) அவர் பனாகொட சமகி மாவத்தை வீட்டில் இருந்த போது முச்சக்கரவண்டியில் வந்த நபர் ஒருவர் அவரை தலையில் கட்டையால் தாக்கியதால் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொலையை செய்த சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் காலி இந்துத் தொகுதியின் பிரதம அமைப்பாளராக இருந்த சம்பத் கமகே, சமகி ஜன பலவேகயவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்துள்ளதாக நுகேகொட காவல்துறை பிரிவின் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் படி, நுகேகொட காவல்துறை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் மீகொட காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |