உள்ளூராட்சி தேர்தலில் கதிரை சின்னத்தில் களமிறங்கும் சுதந்திரக் கட்சி
இலங்கையின் வடக்கு, கிழக்கு உட்பட சகல தொகுதிகளிலும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) தலைமையிலான கூட்டணி கதிரை சின்னத்தில் போட்டியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொருளாளர் லசந்த அழகியவண்ண (Lasantha Alagiyawanna) தெரிவித்துள்ளார்.
அதற்கமைய 2025 ஜனவரி முதலாம் திகதி முதல் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கடந்த வெள்ளிக்கிழமை (06) இரவு கூடிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் வினவியபோதே லசந்த அழகியவண்ண இவ்வாறு குறிப்பிட்டார்.
கூட்டணி அமைத்தல்
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், பொதுஜன ஐக்கிய முன்னணியின் நிறைவேற்று சபை கூட்டமும், சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டமும் இடம்பெற்றது.
இதன்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 341 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவொன்றும், மறுசீரமைப்பு குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
2025 ஜனவரி முதலாம் திகதி முதல் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பமாகும். அத்துடன் சிறிலங்கா சுதந்திர கட்சியை தலைமையாகக் கொண்ட கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.
சுதந்திரக் கட்சியின் உப தலைவர்
கூட்டணி தொடர்பில் சில தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் என்ற ரீதியில் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Sampath Dassanayake) நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.
கதிரை சின்னத்திலேயே இம்முறை தேர்தலில் களமிறங்குவோம். எமது கூட்டணி சார்பில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு 25 சதவீத பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.
சுதந்திர கட்சியின் சார்பில் தேசிய பட்டியல் ஆசனமொன்று வழங்கப்பட வேண்டும் என்பதை புதிய ஜனநாயக முன்னணியிடம் (NDF) வலியுறுத்தி இருக்கின்றோம். விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகின்றோம்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |