மைத்திரி அணியில் மீண்டும் வெடித்தது பிளவு
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அகலவத்தை தொகுதியின் பிரதான அமைப்பாளர் ரஞ்சித் சோமவங்ச எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB)இணைந்துகொண்டுள்ளார்.
ரஞ்சித் சோமவன்ச இன்று எதிர்க்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்ததாக ஐக்கிய மக்கள் சக்தி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரி
சோமவன்ச, மேல் மாகாண சபையில் சுகாதாரம், சுதேச வைத்தியம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு அமைச்சராகவும், கல்வி, கலாசாரம் மற்றும் கலை அமைச்சராகவும் கடமையாற்றியதுடன், அக்காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க பணிகளையும் ஆற்றினார்.
இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என்பதுடன் பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவர் செயற்பாட்டாளராகவும் செயற்பட்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தி மேலும் குறிப்பிட்டுள்ளது.
சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அழைப்பின் பேரில்
கொழும்பு பல்கலைக்கழகத்தின் முற்போக்கு மாணவர் முன்னணி மற்றும் ஐக்கிய மாணவர் முன்னணியின் தலைவராக இருந்த அவர், பின்னர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அழைப்பின் பேரில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக அரசியலில் பிரவேசித்தார்.
சோமவன்ச 1993 ஆம் ஆண்டு மேல் மாகாண சபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார் என்றும், அவர் பல தசாப்த கால அரசியல் அனுபவமுள்ளவர் என்றும், மேல் மாகாண சபையின் அவைத்தலைவர் மற்றும் பிரதி அவைத்தலைவர் போன்ற பதவிகளை வகித்தவர் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி மேலும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்த சிரேஷ்ட உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோர் அரசில் அமைச்சு பதவிகளை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
