சிறிலங்கா பொதுஜன பெரமுனவை மறுசீரமைத்து புதிதாக எழுச்சி பெறுவோம்: எஸ். பி. திஸாநாயக்க உறுதி
சிறிலங்கா பொதுஜன பெரமுனவிடம் தற்போது 69 இலட்சம் வாக்குகள் இல்லை அதில் பாதியளவு வாக்குகள் மட்டுமே இருப்பதாக எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (7) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளதாகவும், கட்சியை மறுசீரமைத்து புதிதாக எழுச்சி பெறும் கட்சியாக முன்னோக்கிச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிபர் தேர்தல்
தற்போது ஒவ்வொரு கட்சிகளின் வாக்கு சதவீதம் மாறி வருகிறது. ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது.
அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது, அதை தவிர்க்க முடியாது, பொதுத்தேர்தலும் நடத்தப்பட உள்ளது.
எதிர்வரும் அதிபர்த் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன எவ்வாறு செயற்படும் என்பது குறித்து கட்சி என்ற வகையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டம்
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதாரத்தை உயர்த்த சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், தற்போதுள்ள வரவு செலவுத் திட்ட இடைவெளியில் பாரிய பற்றாக்குறை நிலவுவதால் கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
நாட்டின் பொருளாதாரம் மீண்டு வர வேண்டுமானால் சிறு வணிகர்கள் உயர்த்தப்பட வேண்டும். ஆனால் அதற்கான பணத்தை பட்ஜெட் மூலம் ஒதுக்க முடியாது.” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |