அநுர தரப்பை கடுமையாக சாடும் மொட்டுக்கட்சியின் முக்கியஸ்தர்
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாரை தெரிவு செய்ய வேண்டும் என்று மக்களுக்கு குறிப்பிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) நேற்று (16) மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ”நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களை நாங்கள் கைப்பற்றுவோம்.
நடைபெற்று முடிந்த தேர்தல்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன கிராமத்துக்கு சேவையாற்றியுள்ளது. ஆகவே 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைப் போன்று இந்த முறையும் வெற்றிபெறுவோம்.
தேசிய மக்கள் சக்தி நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் பொய் மற்றும் வெறுப்பு ஆகியவற்றை மாத்திரம் மக்கள் மத்தியில் பிரதான அரசியல் கொள்கையாக முன்வைத்தது. அரசியல் ரீதியில் தாம் ஏமாற்றமடைந்ததை மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை தெரிவு செய்தால் மாத்திரமே உள்ளுராட்சிமன்ற அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் தவறானதொரு கருத்தாகும்.
அரச தலைவர் என்ற வகையில் பதவிக்கு ஏற்றாற்போல் ஜனாதிபதி நடந்துகொள்ள வேண்டும். யாரை தெரிவு செய்ய வேண்டும் என்று மக்களுக்கு குறிப்பிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு சிறந்த பாடம் புகட்டுவார்கள்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
