அதிபர் ரணிலிடம் அப்படி கேட்கவே இல்லை : சுருதியை மாற்றுகிறது மொட்டு
பொதுத் தேர்தலை முதலில் நடத்துமாறு சிறி லங்கா பொதுஜன பெரமுன அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe)விடம் கோரிக்கை விடுக்கவில்லை மாறாக சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் விருப்பத்தை அதிபருக்கு தெரியப்படுத்தியதாக சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்(Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.
"சட்டத்தின் பிரகாரம் அதிபர் தேர்தலுக்கான திகதிகள் உறுதியாக உள்ளன. நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிந்து இரண்டரை வருடங்களின் பின்னர் எந்த நேரத்திலும் அதனை கலைப்பதற்கு அதிபருக்கு அதிகாரம் உண்டு. நாடாளுமன்றத்தை கலைக்கும் தீர்மானம் அதிபரின் கையிலேயே உள்ளது.
எதற்கும் தயாராக உள்ளோம்
பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa) முதலில் பொதுத்தேர்தலை நடத்தினால் நல்லது என அதிபரிடம் தெரிவித்தார்.எனினும் இது தொடர்பான முடிவை அதிபரே எடுப்பார். இருந்த போதிலும் பொதுத் தேர்தல், உள்ளூராட்சி அல்லது மாகாண சபைத் தேர்தல் எதுவாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள நாம் தயாராகவே உள்ளோம்.
பொதுத் தேர்தலை முதலில் நடத்துமாறு பெரமுன அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதா என்று அவரிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோது, பெரமுன அவ்வாறான கோரிக்கையை முன்வைக்கவில்லை என்றும், பொதுத் தேர்தலை முதலில் நடத்துவது நல்லது என்ற கட்சியின் கருத்தை மட்டுமே தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
ரணிலுக்கான ஆதரவு
சிறி லங்கா பொதுஜன பெரமுன அதிபர் விக்ரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்குமா என வினவியபோது, கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa)வின் எஞ்சிய காலத்திற்கு மாத்திரம் ஆதரவளிக்க உடன்பாடு உள்ளதாக அவர் தெரிவித்தார். "அதற்கு மேல் எங்களிடம் எந்த உடன்பாடும் இல்லை.
அதிபர் பதவிக்கு மிகவும் பொருத்தமான நபரை கட்சி முடிவு செய்யும். எங்களிடம் பல வேட்பாளர்கள் உள்ளனர். சரியான நேரத்தில் வெற்றிபெறும் வேட்பாளரை நாங்கள் பெயரிடுவோம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
