7,130 அரச பேருந்துகளில் 5,000 மட்டுமே பயன்படுத்த முடியும் : அமைச்சர் அறிவிப்பு
இலங்கைப் போக்குவரத்துச் சபையிடம் (SLTB) 7,130 பேருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இன்று (05) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மொத்தமுள்ள பேருந்துகளில் 6,987 சாதாரண பேருந்துகளாகவும், 143 சொகுசு பேருந்துகளாகவும் உள்ளன. இருப்பினும், இவற்றில் சுமார் 5,000 பேருந்துகள் மட்டுமே தற்போது பயன்பாட்டிற்கு ஏற்ற நிலையில் உள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு
இதற்கிடையில், மேல் மாகாணத்தில் 5,524 தனியார் பேருந்துகளும், மத்திய மாகாணத்தில் 2,433 தனியார் பேருந்துகளும், தென் மாகாணத்தில் 1,326 தனியார் பேருந்துகளும் இயங்குகின்றன.

மேலும், வட மாகாணத்தில் 976, கிழக்கு மாகாணத்தில் 520, வடமேல் மாகாணத்தில் 1,324, வடமத்திய மாகாணத்தில் 509, ஊவா மாகாணத்தில் 1,043 மற்றும் சபரகமுவ மாகாணத்தில் 1,866 தனியார் பேருந்துகள் இயங்குகின்றன.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) ஒக்டோபர் 01ஆம் திகதி நிலவரப்படி, 2,966 தனியார் பேருந்துகளுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது.
இதன்படி, 1,826 சாதாரண சேவைப் பேருந்துகள், 257 அரை சொகுசுப் பேருந்துகள், 651 சொகுசுப் பேருந்துகள் மற்றும் 232 அதி-சொகுசுப் பேருந்துகளுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |