புகையிரத சேவைகள் இடைநிறுத்தம்!
சில மார்க்கங்களூடான புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் 14 புகையிரத சேவைகளை இடைநிறுத்தியுள்ளதாக புகையிரத பிரதி பொது முகாமையாளர் ஏ.டி.ஜி. செனவிரட்ன (A . D. G senaviratna) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
மருதானை புகையிரத தொகுதியுடன் இணைந்த சேவையை மேற்கொண்ட புகையிரத கட்டுப்பாட்டாளர் 17 பேர் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அதனையடுத்து அவர்களுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
பிரதான புகையிரத வழி பாதைகளில் 6 புகையிரத சேவைகளும் கடல்வழி மார்க்க புகையிரத பாதை மற்றும் களனிவெளி புகையிரத பாதையில் 4 புகையிரத சேவைகளும் புத்தளம் புகையிரத பாதையில் 3 ரயில் சேவைகளும் வடக்கு ரயில் வழிப்பாதையில் குருநாகல் வரை சேவையில் ஈடுபடுத்தப்பட்ட புகையிரத ஒன்றும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
