தொலைபேசி ஊடாக நுணுக்கமாக போதைப்பொருள் வியாபாரம் : சந்தேகநபர் அதிரடி கைது
அம்பாறை - சாய்ந்தமருது மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்டகாலமாகக் கைத்தொலைபேசி ஊடாகக் குறுஞ்செய்திகளை அனுப்பி ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
35 வயதுடைய குறித்த சந்தேக நபர் சனிக்கிழமை (17) மாலை சாய்ந்தமருது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு உத்தியோகத்தருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இச்சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
சம்பவ தினத்தன்று மாவடிப்பள்ளிப் பகுதியில் இருந்து சாய்ந்தமருது பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் கடத்தப்பட்ட போது குறித்த சந்தேகநபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைத்தொலைபேசி ஊடாக மின்னல் வேகத்தில் குறுஞ்செய்திகளைப் பரிமாறி, மிகவும் நுணுக்கமான முறையில் இச்சட்டவிரோத வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதான சந்தேகநபரைச் சான்றுப் பொருட்களுடன் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான மேலதிக விசாரணைகளை இன்று(18) சாய்ந்தமருது காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |