யாழ் இசைநிகழ்ச்சியில் VIPஅனுமதி மூலம் பெறுப்படும் பணம் முற்றிலும் கல்வி அறக்கட்டளைக்கே
புதிய இணைப்பு
யாழில் பல தென்னிந்திய திரைப்பட பிரபலங்கள் இணைந்து நடத்தவுள்ள இசைநிகழ்ச்சியில் 40,000ற்கும் மேல் இலவச அனுமதி சீட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான இந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பின் அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த இசைநிகழ்ச்சிக்கு பலரும் VIP அனுமதிக்கு எம்மிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் நீண்டகாலமாக பதிவு செய்தவர்கள் நின்றுகொண்டு இசை நிகழ்ச்சியை பார்க்கும் போது இலவசமாக VIP அனுமதியை வழங்கமுடியாது என குறிப்பிட்டுள்ளார்.
எனவே விருப்பமுள்ளவர்கள் பணம் கொடுத்து VIP இருக்கையில் அமர்ந்து பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் VIPஅனுமதி மூலம் பெறுப்படும் பணம் முற்றிலும் கல்வி அறக்கட்டளைக்கே வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை (09.02.2024) ஹரிகரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் ஹரிகரன் மற்றும் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களான நடிகை தமன்னா , ஐஸ்வர்யா ராஜேஷ் , யோகி பாபு , சாண்டி மாஸ்டர் , புகழ் , பாலா, உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
முதலாம் இணைப்பு
யாழ். மாநகரின் SLITT | Northernuni கல்வி நிறுவனத்தினால் தென்னிந்திய நட்சத்திரங்கள் பலரும் பங்குபெறும் மாபெரும் இசை மற்றும் நடன நிகழ்ச்சி, யாழ். முற்றவெளி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்ச்சியானது, எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ். கல்வி மேம்பாட்டு நிதியம்
பல்லாயிரக்கணக்கானோர் இலவச பதிவுகளை மேற்கொள்வதால் இருக்கை பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக இருக்கைகளை ஒவ்வொரு பகுதிகளாக பிரித்து வரையறுக்கப்பட்ட ஆசனங்களுக்கான அனுமதிசீட்டுக்களை குறிப்பிட்ட தொகைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனுமதிசீட்டுக்களின் மூலம் பெறப்படும் நிதியானது யாழ். கல்வி மேம்பாட்டு நிதியத்திற்கு வழங்கப்படவுள்ளது.
மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் இந்தியாவின் ஒரு பிரபல நட்சத்திரம் இணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.