யாழில் கரையொதுங்கும் பொருட்கள் - அமைச்சரின் உத்தரவு: மக்களுக்கு எச்சரிக்கை
புதிய இணைப்பு
இன்று (12) நெடுந்தீவு மற்றும் சிலாபம் கடற்கரைகளில் ஒதுங்கியுள்ள Plastic Pellets குறித்து உடனடியாக விரிவான ஆய்வொன்றை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த Plastic Pellets கடற்கரையில் ஒதுங்கியிருப்பதன் மூலம் கடல் சூழலியல் மற்றும் கடற்கரையோர சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்கள் குறித்து அமைச்சர் தனது தீவிர கவனத்தைச் செலுத்தியுள்ளார்.
கடல் மாசடைதல், குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் மாசடைதல், சுற்றுச்சூழலுக்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், இந்த நிலைமை குறித்து உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நாரா நிறுவன அதிகாரிகளுக்கு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த Plastic Pellets வந்த வழி, அவற்றின் தாக்கம் மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒரு விஞ்ஞான ரீதியான அறிக்கை ஒன்றின் அவசியத்தை அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தின் பல பகுதிகளில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப் பொருட்கள் பெருமளவில் கரையொதுங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் யாழ்ப்பாணத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle) பெருமளவில் கரையொதுங்கி உள்ளன.
குறித்த விடயம் கடற்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட கடற்சூழல் உத்தியோகத்தர்களினால் அடையாளம் காணப்பட்டு அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
பிரதான மூலப்பொருள்
மேற்படி அடையாளம் காணப்பட்ட பொருட்கள் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான பிரதான மூலப்பொருள் என்பதுடன் இது சூழலுக்கும் மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

அந்தவகையில் பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் விழிப்புணர்வுடன் நடந்துகொள்வதுடன் இப்பொருட்களை தொடுதல் மற்றும் எடுத்துச் செல்லுதலை தவிர்க்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உதவி முகாமையாளருக்கு (வ.கி) அறிக்கையிடப்பட்டுள்ளதுடன் இதனை அப்புறப்படுத்தல் தொடர்பாக உரிய பொறிமுறை எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படும் என்பதனை அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        