வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் பிரிவானது, வரும் 2024 மே 2 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்படியாக, பத்தரமுல்ல, ஸ்ரீ சுபுத்திபுர வீதியிலுள்ள, ‘சுஹுருபாய’ இன் 16 ஆம் தளத்திலுள்ள புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.
அன்றைய தினத்திலிருந்து, புதிய அலுவலக இடத்தில், வழமையான அலுவலக நேரங்களான திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 8.30 முதல் மாலை 4.15 வரை சகல கொன்சியுலர் சேவைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆவண அங்கீகாரச் சேவைகள்
வெளியிடப்பட்ட அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சுஹுருபாயவில் உள்ள புதிய வளாகத்திற்கு மின்னணு ஆவண அங்கீகார அமைப்பை (e-DAS) மாற்றுவதற்கு வசதியாக, கொழும்பில் உள்ள தூதரக விவகாரப் பிரிவினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஆவண அங்கீகாரச் சேவைகள் ஏப்ரல் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும்.
எவ்வாறாயினும், இந்த திகதிகளில், யாழ்ப்பாணம், திருகோணமலை, குருநாகல், கண்டி மற்றும் மாத்தறையில் உள்ள பிராந்திய தூதரக அலுவலகங்கள் வழமையான அலுவலக நேரங்களில் பொதுமக்களுக்காக திறந்திருக்கும்.
கொழும்பில் உள்ள தூதரகப் பிரிவு
இதன்போது, ஆவண அங்கீகாரத்திற்கான விண்ணப்பங்களை, வழக்கம் போல் பிராந்திய அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம். ஆனால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் மே 02 வியாழன் அன்று மட்டுமே விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும்.
இதற்கிடையில் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக, ஆவண அங்கீகாரத்திற்கான, எந்தவொரு அவசர விண்ணப்பத்தையும் கொழும்பில் உள்ள தூதரகப் பிரிவு அல்லது ஏதேனும் பிராந்திய தூதரக அலுவலகங்களுக்கு ஏப்ரல் 26 ஆம் திகதி மாலை 4.15 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சு பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |