யாழில் உள்ளூராட்சி மன்றங்களின் பெண் அரசியல் பிரதிநிதிகளுக்கு விசேட செயலமர்வு
யாழ். மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் பெண் அரசியல் பிரதிநிதிகளுக்கு விசேட பயிற்சி வழங்கும் செயலமர்வொன்று இடம்பெற்றுள்ளது.
ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதிப் பங்களிப்பில் "சேர்ச் போ கொமன் கிரவுண்ட்" என்ற சர்வதேச தன்னார்வ அமைப்பு மற்றும் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று இந்த நிகழ்வு இடம்பெற்றது.
உள்ளூராட்சி மன்ற பெண் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டதுடன் விசேடமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சைபி மற்றும் ஜரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர்.
உள்ளூராட்சி மன்ற பெண் பிரதிநிதிகள் தங்களுடைய வேலைத்திட்டங்களை வெளிப்படுத்துவதிலும் தங்களுடைய செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்பதிலும் உள்ள சவால்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அதனை வெற்றிகொள்வது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இதன்போது உள்ளூராட்சி மன்ற பெண் பிரதிநிதிகள் செய்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டதுடன் ஊடகவியலாளர்களும் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.