சிறப்பு அறிக்கையொன்றை வெளியிடப்போகும் ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஆறாம் திகதி சிறப்பு அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாக தெரியவந்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் மாநாடும் எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அந் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி இந்த அறிக்கையை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விளக்கமறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த ரணில் விக்ரமசிங்க, கடந்த 26 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
வைத்திய அறிக்கை
முன்னாள் ஜனாதிபதி தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட வைத்திய அறிக்கைகளை பரிசீலித்த பின்னர், கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.
அதன்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த முன்மொழிவுகளை பரிசீலித்த பின்னர், ரணில் விக்ரமசிங்கவை தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
வைத்தியசாலை சிகிச்சை
அதனைதொடர்ந்து, அதே நாளில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு அவரை 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பின்னர், அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், மறுநாள், மருத்துவ பரிந்துரைகளின் பேரில் ரணில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (29) வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

