கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் பிற்பகல் 2 மணிக்கு கட்சியின் விசேட மாநாடு நடைபெறவுள்ளது.
கட்சி கட்டமைப்பில் திருத்தம்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தற்போது நிலவும் காலநிலையை கருத்திற்கொண்டு இந்த விசேட மாநாட்டை உள்ளரங்கில் நடத்த தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த மாநாட்டின் போது கட்சியின் அரசியலமைப்பை மாற்றுவது குறித்து கவனம் செலுத்தப்படும் என நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வருடம் அமைப்பு மாற்றத்தை முன்வைத்த இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து ஐக்கிய தேசியக் கட்சி புதிய தீர்மானங்களை நிறைவேற்றி புதிய சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் கட்சி கட்டமைப்பில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாற்றங்களினூடாக, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் நாட்டின் விடயங்கள் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதில் அதிக இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கு கட்சி எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 56 ஆவது மாநாடு கடந்த மாதம் நடைபெறவிருந்த போதிலும், சீரற்ற வானிலை காரணமாக அது பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.