கோரவிபத்தில் சிக்கி விசேட அறுவைச்சிகிச்சை நிபுணர் உயிரிழப்பு
பொலநறுவையில் இடம்பெற்ற வீதி விபத்தில் விசேட அறுவைச்சிகிச்சை நிபுணர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலநறுவை மருத்துவமனையில் பணியாற்றும் 50 வயதுடைய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
நேற்று வெள்ளிக்கிழமை (06) மின்னேரியாவில் இடம்பெற்ற கார் மற்றும் டிப்பர் மோதிய விபத்தில் இந்த துயர சம்பவம் இடம்பெறுள்ளது.
டிப்பர் -கார் மோதி விபத்து
பொலன்னறுவை - ஹபரணை வீதியில், 39-வது மைல்கல் அருகே மாலை வேளையில் இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மின்னேரியாவிலிருந்து ஹபரணை நோக்கிச் சென்ற கார், எதிரே வந்த டிப்பருடன் மோதியது. விபத்தில் காயமடைந்த இரு வாகன ஓட்டுநர்களும் ஹபரணை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, காரை ஓட்டி வந்தவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோதே உயிரிழந்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
அறுவை சிகிச்சை நிபுணர்
உயிரிழந்தவர் பொலநறுவை, நியூ டவுன் பகுதியில் வசித்து வந்த அறுவை சிகிச்சை நிபுணர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

டிப்பர் ஓட்டுநர் மேலதிக சிகிச்சைக்காக பொலநறுவை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த விபத்து குறித்து மின்னேரியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |