வைகாசி விசாகம் இன்று : இந்த நாளின் சிறப்புகள் என்ன..! முருகனை எப்படி வழிபட வேண்டும்
வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும்.
விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம்.
வைகாசி விசாகம் ஆண்டுதோறும் மே அல்லது ஜூன் மாதங்களில் கடைபிடிக்கப்படுகிறது. அதன் படி, இந்த 2023 ஆம் ஆண்டில் வைகாசி விகாசம் ஆனது, இன்று (2) காலை 05.55 மணிக்குத் ஆரம்பமாகி நாளை காலை 05.54 வரை விசாகம் நட்சத்திரம் உள்ளது.
பொதுவாக குழந்தை வரம் வேண்டுபவர்கள் முருகப் பெருமானுக்கு சஷ்டி திதியில் விரதம் இருப்பது வழக்கம்.
அவர்கள் முருகன் அவதரித்த வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து வழிபட்டால், அடுத்த ஆண்டு வைகாசி விசாகத்திற்குள் நிச்சயம் குழந்தைப் பேறு ஏற்படும் என்பது நம்பிக்கை.
வைகாசி விசாகத்தின் மகிமைகள்
அதே போல், கணவன் - மனைவிக்குள் ஒற்றுமையில்லை, வீட்டில் எப்போதும் சண்டை, கணவன் - மனைவிக்குள் ஏதாவது ஒரு பிரச்சினை வந்து கொண்டே இருக்கிறது என்பவர்கள்.
தொழிலில், செய்யும் வேலையில் முன்னேற்றமே இல்லை, முன்னேறுவதற்கு ஏதாவது ஒரு தடை இருந்து கொண்டே இருக்கிறது என்பவர்கள்.
நீண்ட காலமாக நோயால் அவதிப்படுபவர்கள். வழக்கு விவகாரங்களில் சிக்கி தவிப்பவர்கள் இந்த வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்தால் வேண்டிய வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றுவார் முருகன் என்பது எம்மவர்களிடம் காணப்படும் நம்பிக்கை ஆகும்.
விசாகம் என்றால் "மலர்ச்சி'
வைகாசி முதல் திகதியில் கங்கை நதியில் நீராடினால் ஏழேழு ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
வைகாசி என்பதை விசாகம் என்றும் சொல்வர். விசாகம் என்றால் "மலர்ச்சி' என்று பொருள். வைகாசிதான் சமஸ்கிருதத்தில் வைசாகம் ஆனது.
இதன்படி முருகனை வேண்டி விரதம் இருக்கும் போது வாழ்வின் இருள் நீங்கி மலர்ச்சியடையும் என்பது ஐதீகம்.
இம்மாதத்தில் புனித நதியில் நீராடி மஹாவிஷ்ணுவை துளசி பத்ரங்களால் பூஜை செய்தால் நற்பேறுகள் பல பெறலாம் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.
