ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்களால் ஆர்ப்பாட்டம்: கண்ணீர்ப்புகையை பிரயோகித்த பாதுகாப்பு படையினர்
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு முன்பாக பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்களால் இன்று(18) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைக்க, சிறிலங்கா பாதுகாப்பு படையினர் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தவர்களை கலைந்து செல்லுமாறு சிறிலங்கா பாதுகாப்பு படையினர் அறிவுறுத்திய போதும், அதனை மீறி குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களின் சம்பள அதிகரிப்புடன், பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டுமென கோரி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பணி விலகல் ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியாக இன்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம்
சம்பள முரண்பாடுகளை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட நேரிடும் என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்கள் தங்கும் விடுதி பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நலன் சார்ந்த பிரச்சனைகளையும் உடனடியாக தீர்க்க கோரி, கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களால் இன்று(17) மற்றுமொரு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது, பாதுகாப்பு கருதி கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு முன்பாக சிறிலங்கா காவல்துறையினர், கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் வரிசைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், நீர்த்தாரை பிரயோக வண்டிகளும் தயார் நிலையில் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில், பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளியிட்டதன் பின்னர், ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் குறித்த இடத்தில் இருந்து அமைதியான முறையில் கலைந்து சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |