அச்சுறுத்தலான நாடாக மாறியது ஸ்ரீலங்கா - தலதா அத்துகோரள தகவல்
மக்கள் உயிர்வாழ அச்சுறுத்தலான நாடாக ஸ்ரீலங்கா மாறிவிட்டதாக எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தலதா அத்துகோரள, கடல்சார் உயிரினங்களுக்கும் ஆபத்தான பகுதியாக இலங்கை மாறியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டில் ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்ட போது இந்த நாட்டிலுள்ள மக்களுக்கு பாதுகாப்பும் தேசிய பாதுகாப்பும் உறுதிப்படுத்தக்கூடிய அரசாங்கத்தை அமைப்பதாக தற்போதைய கோட்டாபய - மஹிந்த தரப்பினர் தெரிவித்து வந்தனர்.
அதனை நம்பியே 69 இலட்சம் மக்களும் வாக்குகளை அளித்திருந்தனர். ஆனால் உண்மையிலேயே இன்று மக்களுக்குப் பாதுகாப்பற்ற நாடாக ஸ்ரீலங்கா மாறியிருக்கின்றது.
ஒருபக்கம் மக்களுக்கு உயிர்வாழ வழியில்லாத நாடாகியுள்ள நிலையில், மறுபக்கத்தில் கடல்வாழ் உயிரினங்களுக்கும் பாதுகாப்பு இன்றிய நாடாக ஸ்ரீலங்கா மாறிவிட்டது என்றார்.