நல்லாட்சியை மேம்படுத்துவதில் எதிர்க்கட்சியின் முக்கிய பங்கு - ஜூலி சங் வெளிப்படை!
சிறிலங்காவிற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க உயர் மட்ட குழு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்டெடுப்பது தொடர்பாக குறித்த குழுவினர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஆசியாவிற்கான திறைசேரி துணைச் செயலாளர் ரொபர்ட் கப்ரோத் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான துணை இராஜாங்கச் செயலாளர் கெல்லி கெய்டர்லிங் தலைமையிலான அமெரிக்காவின் திறைசேரித் திணைக்களம் மற்றும் இராஜாங்கத் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட பிரதிநிதிகள் இலங்கையின் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.
எதிர்க்கட்சியுடன் சந்திப்பு
இந்நிலையிலேயே இன்றைய எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன் போது இலங்கையின் பொருளாதார அரசியல் நெருக்கடிகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
வெளிப்படைத் தன்மை மற்றும் நல்லாட்சியை மேம்படுத்துவதில் எதிர்கட்சிகள் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Today, we met with leaders from @sjbsrilanka to hear their perspectives on Sri Lanka’s economic and political challenges. Opposition parties play a vital role in any democracy including promoting transparency and good governance. pic.twitter.com/hkWD1Pi0ZE
— Ambassador Julie Chung (@USAmbSL) June 29, 2022
அமெரிக்க உயர்மட்ட குவின் சந்திப்பு
அத்துடன் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோரையும் அமெரிக்க உயர்மட்ட குழுவினர் நேற்று மாலை சந்தித்துள்ளனர்.
பொருளாதாரத்தில் வளர்ச்சியடைய செய்யும் வகையில் சர்வதேச நாடுகளுடன் இணைந்து பணியாற்றி வரும் இலங்கையின் செயற்பாடுகள் குறித்து அவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
ஜி.எல். பீரிஸ் உடன் சந்திப்பு
இதேவேளை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மற்றும் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோரையும் அமெரிக்க குழு சந்தித்துள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமையின் காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் பல சவால்களை எதிர்கொள்வதில் அமெரிக்க ஆதரவின் சாத்தியமான பகுதிகள் குறித்து எதிர்க்கட்சி கலந்துரையாடியுள்ளது.

