ஆலய உற்சவத்தில் படுகொலை - சிறுவன் விளக்கமறியலில்!
அக்கரைப்பற்று காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஆலயம் ஒன்றில் வைத்து நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் வருடாந்த உற்சவ நிகழ்வின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தின் போது அக்கரைப்பற்று, கண்ணகிபுரத்தைச் சேர்ந்த 27 வயதுடைய குமாரசிங்கம் சிறிதரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அம்பாறை, அக்கரைப்பற்று பனங்காடு பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றில் வைத்து இளைஞன் ஒருவன் மீது மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இளைஞன் உயிரிழப்பு
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 14 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 14 ஆம் திகதி குறித்த ஆலயத்தில் வருடாந்த ஊற்சவத்தின் போது ஆலயத்தில் இருவருக்கிடையே காவடி எடுப்பது தொடர்பான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
வாக்குவாதம் வலுப்பெற்றதையடுத்து 27 வயது இளைஞன் ஒருவர் மீது 17 வயதுடைய சிறுவன் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்தவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
விளக்கமறியலில் சந்தேக நபர்
அதனையடுத்து கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட 17 வயது சிறுவன் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த தாக்குதலில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
