அம்பாறையில் காவலரண் எரிப்பு- நேரடியாக விரைந்த மனித உரிமை ஆணைக்குழு!
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள காவல்துறை காவலரண் பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற தாக்குதல் காரணமாக காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மற்றும் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் விசாரணைகளை மனித உரிமை ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.
இதற்கமைய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையிலான குழு இன்று சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டனர்.
மேலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் தலைமையிலான குழுவினர் அக்கரைப்பற்று காவல் நிலையம் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட காவல்துறை மற்றும் பொதுமக்களிடம் இவ்விடயம் சம்பந்தமாக விசாரணைகளை ஆரம்பித்து வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் பதற்றம் ஏற்பட சம்பவ இடத்தில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் இறந்துவிட்டதாக அங்கு நின்றவர்கள் கூறிய வதந்தியே கலவரமாக மாறுவதற்கு வழியேற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர குறித்த சோதனை சாவடி தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளும் ஏற்கனவே வெளியாகியுள்ளதாக தற்போதைய விசாரணைகளில் இருந்து வெளியாகியுள்ளது. சம்பவ தினத்தன்று குறித்த சோதனை சாவடியைதலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர்கள் மோதியதாகவும் அதனால் ஏற்பட்ட விசாரணையின் போது பதற்றம் ஏற்பட்டதாகவும் காவல்துறை தரப்பினர் குறிப்பிட்டுள்ளதுடன் பொதுமக்கள் காவல்துறையின் அறிக்கை உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதே வேளை சம்பவம் தொடர்பில் பூர்வாங்க விசாரணை அறிக்கையை உடனடியாக அனுப்புமாறு அக்கரைப்பற்று காவல்துறையிடம் மனித உரிமை ஆணைக்குழு கேட்டுள்ளது.
சம்பவத்தில் அம்பாறை மாவட்டம் – பாலமுனை பிரதேசத்தில் காவல்துறையின் வீதித் தடைக் காவலரண் ஒன்றினை பொதுமக்கள் தீ வைத்து எரித்துள்ளதோடு, அங்கிருந்த காவல்துறையினர் மற்றும் ஊர் காவல் படையினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வீதித் தடைக் காவலரணில் இருந்த ஊர் காவல் படை உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகன் ஒருவரை மிகவும் மோசமாகத் தாக்கியதாகவும் அதனையடுத்து அங்கிருந்த காவல்துறை மற்றும் ஊர்காவல் படை உத்தியோகத்தர்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதோடு, வீதித் தடைக் காவலரண் மீது தீ வைத்ததாகவும் சம்பவ இடத்தில் இருந்தோர் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து அந்த இடத்துக்கு சென்றிருந்த அக்கரைப்பற்று காவல் நிலையப் பொறுப்பதிகாரி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுறது. இதன்போது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் இருவர் காயமடைந்தனர்.
40 வயதுடைய இமாமுதீன் என்பவரும், 31 வயதுடைய பாஹிர் என்பவரும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வைத்திய அத்தியட்சகர் ஆஷாத் எம். ஹனீபா தெரிவித்தார்.
இதேவேளை இந்த சம்பவத்தில் காயமடைந்த காவல்துறையினர் 6 பேரும், ஊர் காவல் படையினர் 3 பேரும் சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பொதுமக்களில் இமாமுத்தீன் என்பவருக்கு கையிலும், பாஹிர் என்பவருக்கு வயிற்றிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை சம்பவத்தை அறிந்து அங்கு சென்ற அக்கரைப்பற்று காவல் நிலைய பொறுப்பதிகாரி ஊடகவியலாளர் உட்பட 10 இற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பொதுமக்கள் என 16 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு ஆரம்பித்த இந்த சம்பவம் அதிகாலை 1.30 மணி வரையிலும் நீடித்திருந்தது.
அத்துடன் சம்பவம் தொடர்பில் ஆராய கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் சட்டத்தரணி கமல் சில்வா உள்ளிட்ட காவல்துறை உயர்மட்ட அதிகாரிகள் விசாரணையினை முன்னெடுத்து வருகின்றனர்.