தமிழ் ஊடகவியலாளர்களின் புகைப்படங்களுடன் தேடி அலையும் புலனாய்வுத்துறை!
சுயாதீன ஊடகவியலாளர்களான மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையத்தின் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய இருவரையும் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு துறை அதிகாரிகள் சிலர் புகைப்படங்களுடன் தேடி அலைவதாக தெரியவந்துள்ளது.
'கோட்டா கோ கோம்' போராட்டத்தை சமூக ஊடகங்கள் வாயிலாக தூண்டி விடுவதாகவும், சமூக ஊடகங்களில் பிரிவினைவாதத்தை தூண்டி தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு புத்துயிர் கொடுக்க முனைவதாக குற்றம் சுமத்தி ஊடகவியலாளர்களான செ.நிலாந்தன் மற்றும் பு.சசிகரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கு சென்ற புலனாய்வு துறை அதிகாரிகள் என தம்மை அடையாளம் காட்டிய சிலர் ஊடகவியலாளர்களின் புகைப்படங்களை காட்டி விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனால் அச்சமடைந்த அவர்களது உறவினர்கள் அவர்கள் எங்கு உள்ளார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது என கூறியுள்ளனர்.
தென்னிலங்கையில் உள்ள மக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தங்களது கருத்துக்களை கூறி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் வடகிழக்கில் உள்ள சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து பாதுகாப்பு தரப்பினர் மற்றும் புலனாய்வு துறையினர் செயற்பட்டு வருகின்றமை காவல்துறையினர் மற்றும் நீதித்துறை மீதான சுயாதீனத்தை இல்லாமல் செய்துள்ளதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.