நடேசனைப் படுகொலை செய்தவர்கள் கொடிய ஆட்சியாளர்களின் அனுசரணையுடன் சுதந்திரமாக!
நடேசன் படுகொலை செய்யப்பட்டு 18 வருடங்களாகியும், அவரைப் படுகொலை செய்தவர்கள் மிகவும் சுதந்திரமாக, இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற கொடிய ஆட்சியாளர்களின் அனுசரணையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது மிகவும் வேதனையானது.
அதுமட்டுமன்றி இந்த நாட்டின் நீதியின் மேலுள்ள கலங்கமுமாகவே பார்க்கப்படுகின்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
இன்றைய தினம் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐ.நடேசனின் 18வது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
படுகொலை
2004ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி காலையிலேயே ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவர் படுகொலை செய்யப்படுவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்பு தான் மட்டக்களப்பு நகரிலே என்னுடன் உரையாடி விட்டுச் சென்றார்.
அதன் பின்னர் சுமார் 08.30 மணி போல் அவர் தனது கடமைக்குச் செல்கின்ற நேரத்தில தமிழினத்தின் விரோதிகளால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகச் செய்தி கேட்டேன். அவரின் படுகொலை செய்தி கேட்டு அவர் சுட்டக்கொல்லப்பட்ட இடத்திற்குச் சென்று பார்த்த போது அவரின் உடலைத் தூக்குவதற்குக் கூட யாரும் இல்லாத நிலையில் மக்கள் பயந்து கொண்டிருந்தனர்.
அந்த நேரம் நானும் இன்னுமொரு ஊடகவியலாளர் இரா.துரைரெட்ணம் அவர்களுமே அவரின் உடலைத் தூக்கி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் கைங்கரியத்தைச் செய்தோம்.
நண்பர்கள்
அந்தளவிற்கு ஊடகவியலாளர் நடேசனுக்கும் எனக்குமான நெருக்கும் பலமாக இருந்தது. அவர் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 18 வருடங்கள் கடந்திருந்தாலும், அவரைச் சுட்டுப் படுகொலை செய்தவர்கள் மிகவும் சுதந்திரமாக இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற கொடிய ஆட்சியாளர்களின் அனுசரணையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது மிகவும் வேதனையானதும், இந்த நாட்டின் நீதியின் மேலுள்ள கலங்கமுமாகவே பார்க்கப்படுகின்றது.
இந்த நாட்டிலே இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் படுகொலைகள் தொடர்பில் இந்த நாட்டின் தலைமைகளால் சரியான விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக இல்லை. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்கள் இன்னும் அவர்களை எண்ணி வேதனையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
அன்றைய நெருக்கடியான காலகட்டத்திலே தமிழ் மக்களுக்கும் சரி ஏனைய மக்களுக்கும் உண்மை நிலைகளை எடுத்துரைத்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாகப் படுகொலை செய்யப்பட்டு வந்தார்கள்.
அந்த விதத்திலே அதிலே நடேசனும் சேர்க்கப்பட்டார். இவ்வாறு ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்வதன் ஊடாக இந்த நாட்டில் தமிழ் மக்களின் உரிமைகளையோ, உரிமைப் போராட்டங்களையோ தடுத்து நிறுத்தலாம் என்று நினைத்த அரசாங்கம் இன்று பாரியதொரு பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.
எனவே ஊகவியலாளர்களின் சுதந்திரத்திலே தலையிடாமல் படுகொலை செய்யப்பட்ட நடேசன் உள்ளிட்ட ஏனைய பத்திரிகையாளர்களின் படுகொலைகளுடன் தொடர்புடையவர்களை நீதியின் முன்நிறுத்தி ஊடகவியலாளர்களுக்கு நியாயபூர்வமான தீர்வினை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.