பாரிய அழிவுகளை எதிர்நோக்க நேரிடும் - தமிழருக்கு சிங்கள தேசம் விடுத்துள்ள எச்சரிக்கை!
பௌத்த முக்கியத்துவமிக்க சியாம் நிகாய இலங்கையில் நிறுவப்பட்டு 270 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்வுகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தடையேற்படுத்தினால், அவர்கள் பாரிய அழிவுகளை எதிர்நோக்க நேரிடும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன எச்சரித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கு தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையிலேயே, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடாந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில், சிறிலங்கா தொல்பொருளியல் திணைக்களம் அதன் சின்னத்தை அடிப்படையாக கொண்டு பௌத்த மதத்தை மாத்திரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கிறாதா அல்லது ஏனைய மதங்களை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறதா என கேள்வியெழுப்பியிருந்தார். அவரது கருத்திற்கு நான் பதிலளிக்க விரும்புகிறேன்.
தேசிய அடையாளம்
இவ்வாறான முதிர்ச்சியற்ற கேள்விகளை சிறுவர்கள் கூட கேட்க மாட்டார்கள். ஒரு இடத்தின் தொல்பொருள் முக்கியத்துவத்தின் அடிப்படையில் அதனை பாதுகாப்பது தொடர்பான நடவடிக்கைகளை திணைக்களம் முன்னெடுக்கும்.
எந்தவொரு மதத்தையும் அடிப்படையாக கொண்டு இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது. தேசிய அடையாளமாக இருக்கும் சிறிலங்கா தொல்பொருளியல் திணைக்களத்தின் சின்னம் சிலரது கண்களில் முட்களை குத்துவது போல் இருக்கிறது.
இதன் காரணமாக அதனை அழிக்க முயற்சிக்கிறார்கள். இலங்கையில் உள்ள பௌத்த முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பௌத்தர்களுக்கு மாத்திரம் என சுமந்திரன் உள்ளிட்ட சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறான விடயத்தை வெளிக்காட்ட முயற்சிக்கிறார்கள்.
அது இலங்கையில் உள்ள அனைவருக்கும் சொந்தமானது. எனவே, அவ்வாறான தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்கும் பொறுப்பு இலங்கையர்கள் அனைவருக்கும் உள்ளது.
கடுமையான நடவடிக்கை
இதேவேளை, பௌத்த முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் சிவலிங்கத்தை வைத்து அதனை இந்து முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாற்றவும் வரலாற்றை மாற்றவும் முயற்சிக்க கூடாது.
அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எனினும், இன மத விடயங்களை அடிப்படையாக கொண்டு நாம் அதனை கூறவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
