அநாமதேய தொலைபேசி அழைப்பின் ஊடாக எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு அச்சுறுத்தல்!
சிறிலங்காவின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு அநாமதேய தொலைபேசி அழைப்பின் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவரிடமிருந்து தன்னை அச்சுறுத்தும் வகையில் தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், தன்னுடன் தொடர்புடைய காணொளிப் பதிவுகளை வெளியிடவுள்ளதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சியாக தொலைபேசி அழைப்பாளர் தன்னை அடையாளப்படுத்தியதாகவும் நீதிமன்றங்களில் அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நபர் அண்மையில் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்கின் ஒவ்வொரு விபரமும் தனக்குத் தெரியும் எனக் குறிப்பிட்டதாக, அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே எதிர்காலத்தில் அந்த குரல் பதிவை வெளியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விரைவில் தன்னை சந்திக்க வருவதாக குறித்த நபர் கூறியதாகவும், அவரை தான் சந்திக்கப்போவது இல்லை எனவும் சம்பிக்க ரணவக்கதெரிவித்துள்ளார்.
இது சிறிலங்கா அரசாங்கத்தின் எதிரிகளை அழிக்கும் தந்திரம் எனவும், நாடும் அரசாங்கமும் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நேரத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்பும் நாடகங்களில் இதுவும் ஒன்று எனவும், பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.