நிலக்கரி ஊழல் விசாரணை...! நாளை சாட்சிப் பதிவுகள் தொடக்கம்
நிலக்கரி கொள்முதல் தொடர்பான முறைகேடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, சாட்சியங்களைப் பதிவு செய்யும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.
குறித்த நடவடிக்கை நாளை (06-07-2026) காலை முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் முதலாவதாகச் சாட்சியமளிப்பதற்காக தற்போதைய எரிசக்தி அமைச்சின் செயலாளர் ஜி. எம். ஆர். டி. அபோன்சோ அழைக்கப்பட்டுள்ளார்.
அவரைத் தொடர்ந்து எரிசக்தி அமைச்சின் கொள்முதல் குழு உறுப்பினர்கள், தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஆகியோரும் சாட்சியமளிப்பதற்காக ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளனர்.
வாக்குமூலங்கள் பதிவு
சாதாரண நடைமுறைகளின்படி ஆணைக்குழு முதற்கட்டமாக சாட்சிகளிடமிருந்து சாட்சியங்களை விசாரணை செய்யும். இதையடுத்து முறைகேடுகளுடன் தொடர்புடைய குறிப்பிட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டதும் அவர்கள் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டு ஆணைக்குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவர்.

சாட்சியமளிக்க வருபவர்கள் தேவைப்படின் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த சட்டத்தரணிகளை அழைத்து வர அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவினரால் இதுவரை 100 இற்கும் மேற்பட்ட நபர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வாக்குமூலம் பதிவு
அவர்களில் முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் இரண்டு நாட்களில் சுமார் 6 மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
அத்துடன் மற்றொரு முன்னாள் எரிசக்தி அமைச்சரான பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அண்மையில் லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கு நேரடி அவதானிப்பு விஜயம் ஒன்றையும் மேற்கொண்டிருந்தனர்.
இந்த விசேட ஆணைக்குழுவிற்கு மொத்தம் 28 முறைப்பாடுகள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |