கோட்டாபய அரசாங்கத்தை வீழ்த்த மாபெரும் போராட்டம்- விடுக்கப்பட்டது பகிரங்க அழைப்பு!
அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து வீழ்த்துவதற்காக மக்கள் விடுதலை முன்னணி, பாரிய எதிர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இளைஞர்கள், உழவர்கள், மீனவர்கள் பெண்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து முதலாவது மிகப் பெரிய எதிர்ப்பு போராட்டத்தை அடுத்த வாரம் கொழும்பில் நடத்தவுள்ளது என அதன் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மக்களை மிகப் பெரும் கஷ்டத்திற்குள் தள்ளி இருக்கும் அரசாங்கம், தாம் மிகப் பெரிய தவறை செய்து விட்டதாக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், தற்போது பலவந்தமாக அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
நாட்டின் அனைத்து துறைகளும் பாரதூரமான ஆபத்தில் இருக்கும் போது, அரச தலைவர் பல அரச நிறுவனங்களுக்கு சென்று மக்களிடம் முட்டாள்தனமான கேள்வியை கேட்டு புகைப்படங்களில் தோன்றி, சுய திருப்தி அடைந்து வருகிறார் எனவும் ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை நடத்தி, போராடி இந்த துஷ்ட ஆட்சியை விரட்டியடித்து மக்கள் சார்பு அரசாங்கத்தை உருவாக்குவோம் என நாங்கள் மக்களுக்கு கூறுகிறோம். இதற்கான தொடர் ஆர்ப்பாட்டங்களை நாங்கள் ஒழுங்கு செய்துள்ளோம்.
மேலும் இன்றைய தினம் ஹம்பாந்தோட்டையில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம். 17 ஆம் திகதி களுத்துறையில் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம். எதிர்வரும் தினங்களில் நாடு முழுவதிலும் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளோம்.
எதிர்வரும் 18 ஆம் திகதி எமது இளைஞர் அணியினர், நாட்டின் வளங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக கொழும்பில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளனர். எதிர்வரும் 29 ஆம் திகதி பொலன்நறுவையில் கமத்தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
இந்த அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து இம்மாத இறுதியில் மீண்டும் கொழும்பில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம் எனவும் ரில்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
