ஸ்வீடன் நாட்டுப் பெண் படுகொலை விவகாரம் - அத்துரலிய தேரரைக் காட்டிக்கொடுத்த மைத்திரி!
றோயல் பார்க் பகுதியில் யுவதி கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இளைஞனின் குடும்பத்தினருடன் அத்துரலியே ரத்ன தேரர் தன்னை சந்திக்க வந்ததாக முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி கொழும்பு ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள றோயல் பார்க் தொடர்மாடி வீடமைப்பு தொகுதியில் 19 வயதான ஸ்வீடன் நாட்டை சேர்ந்த Yvonne Jonsson என்ற யுவதி கொலை செய்யப்பட்டார்.
பொதுமன்னிப்பு வழங்கிய மைத்திரி
இந்த சம்பவம் தொடர்பில் ஜூட் அன்டனி ஜெயமஹா என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதனையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு அன்றைய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
அத்துரலியவை காட்டிக்கொடுத்தார் மைத்திரி
மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இளைஞனின் குடும்பத்தினருடன் அத்துரலியே ரத்ன தேரர் தன்னை சந்திக்க வந்த போது, அவர்கள் பெரிய கடித கட்டு ஒன்றையும் கொண்டு வந்திருந்தனர்.
மகன் சிறையில் இருக்கின்றார். அவர் எந்த தவறும் செய்யவில்லை. தற்போது அவர் பட்டப்பின்படிப்புக்கு பதிவு செய்து படித்துக்கொண்டிருக்கின்றார் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஆகவே, மகனை விடுதலை செய்யுங்கள் என குடும்பத்தினர் தன்னிடம் கூறியதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மரணதண்டனை வழங்கப்பட்ட இளைஞன்
றோயல் பார்க் சம்பவத்தின் குற்றவாளியான இளைஞனின் குடும்பத்தினருடன் அத்துரலியே ரத்ன தேரர், முன்னறிப்பு செய்யாது என்னை சந்திக்க வந்தார். சிறைச்சாலைகள் திணைக்களமும் நீதியமைச்சும் அந்த இளைஞனை விடுதலை செய்வதற்கான பரிந்துரைகளை செய்திருந்தது.
இதனால், இளைஞனை விடுதலை செய்தால், பரவாயில்லை என ரத்ன தேரர் தெரிவித்தார். ஆகவே நான் இளைஞனை விடுதலை செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டேன். இதனால் இளைஞனை விடுதலை செய்ய நான் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டது.
பணம் கொடுக்கப்பட்டது
அதனையடுத்து அது குறித்த விடயங்களை கண்டறியும் பொறுப்பை நான் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்தேன். இந்நிலையில், இளைஞனின் குடும்பத்தினர் எவருக்கோ ஒரு தொகை பணத்தை கொடுத்திருப்பதாக புலனாய்வுப் பிரிவினர் எனக்கு தெரியப்படுத்தினர்.
பணத்தை பெற்றுக்கொண்டவர்களே இளைஞனை விடுதலை செய்ய மிகவும் அக்கறை காட்டியுள்ளதாக சந்தேகம் இருக்கின்றது. அந்த இடத்தில் தவறு நடந்துள்ளது என்பது எனக்கும் தெரிகிறது.
அதனால் நானும் அதனை ஒப்புக்கொள்ள நேரிடும் எனவும் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
