குடும்ப ஆட்சியை ஆட்டம் காண வைத்த மக்கள் புரட்சி- வெளியில் நடமாடத் தயங்கும் ராஜபக்ஷாக்கள்!
ராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச தலைமையில் கிரிஹிப்பன்ஹார மகாவலி விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெறவிருந்த காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வுக்கு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டதன் காரணமாக, ஷசீந்திர ராஜபக்ச அதில் கலந்துக்கொள்ளவில்லை.
பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இராஜாங்க அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள், பிரதேசத்தில் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டிருந்தனர்.
இராஜாங்க அமைச்சர் நிகழ்வுக்கு வருவார் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அங்கு செல்லவில்லை என தெரியவருகிறது.
இதேவேளை நுவரெலியாவில் மலர், செடிகள் கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதற்காகச் சென்ற ஷிரந்தி ராஜபக்சவிடம் மக்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர்.
நுவரெலியாவிற்கு மலர் செடிகள் கண்காட்சி இன்று ஆரம்பிக்கவிருந்தது. அந்நிகழ்வை ஆரம்பித்து வைப்பதற்காக ஷிரந்தி ராஜபக்ச அங்கு சென்றிருந்தார்.
இதன்போது அரலியா ஹோட்டல் பெட்ரோல் கொட்டகைக்கு அருகில் உள்ள மக்கள் அவரை பார்த்து ஏளனம் செய்து, சாலையை அடைத்துள்ளனர்.
இதனால் அவர் விழாவில் கலந்து கொள்ளாமல் மீண்டும் கொழும்பிற்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள வாழ்க்கை செலவு அதிகரிப்பு, அத்தியவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் என்பன காரணமாக மக்கள் அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர்.
இதன் காரணமாக பல இடங்களில் திட்டமிடப்படாத வகையில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடந்து வருகின்றன.
