தென்னிலங்கையின் நிலைமை மிகவும் மோசம்- மக்கள் வீதியில் இறங்கலாம்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
கொழும்பு நகரின் நிலைமை மிக மோசமாக இருப்பதாகவும் மக்கள் வீதியில் இறங்கக் கூடும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மக்கள் வீதியில் இறங்கிய பின்னர், அவர் தூண்டினார், இவர் தூண்டினார் எனக் கூறாது தற்போதே பிரச்சினைக்கு தீர்வு காணுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நன்றாக கேளுங்கள் கொழும்பு நகரின் நிலைமை மிக மோசமாக இருக்கின்றது. பிரதமருக்கும் தெரியும். கொழும்பு மக்களுக்கு கடந்த மூன்று வாரங்களாக சமையல் எரிவாயு கிடைக்கவில்லை.
கொழும்பு நகரில் சமையல் எரிவாயு இல்லாத நிலையில், சிறிய உணவு கடைகளும் மூடப்பட்டுள்ளன. நகரில் வாழும் மக்களுக்கு விறகும் இல்லை. மண்ணெண்ணெய் அடுப்பில் சமைப்பதற்கும் முடியாமல் போயுள்ளதுடன் சில வாரங்களாக மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை.
இதனால், அடுத்த சில தினங்களில் கொழும்பு நகர மக்கள் வீதியில் இறங்குவார்கள். அதன் பின்னர், அவர் தூண்டினார், இவர் தூண்டினார் என்று கூற வேண்டாம். இதனால், உடனடியாக கொழும்பில் வாழும் மக்களுக்கு மண்ணெண்ணெய்யாவது கொடுங்கள்.
மக்களுக்கு உண்ண வழியில்லை. சமைக்க வழியில்லை. எரிவாயு இல்லாத காரணத்தினால், அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. தொடர்மாடி வீடுகளில் இருக்கும் மக்கள் விறகு அடுப்புகளில் சமைக்க முடியாது.
உடனடியாக இதனை புரிந்துக்கொண்டு, பிரதமர் நகரில் உள்ள மக்களுக்கு உடனடியாக மண்ணெண்ணெயை பெற்றுக்கொடுங்கள் என முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் கூறியது போல் கொழும்பு நகரில் பிரச்சினை உள்ளது.
எரிபொருளை பெற்றுக்கொள்வது மற்றும் தமது அன்றாட உணவுக்கு தேவையான பணமும் போதாமல் இருக்கின்றது. அன்றாட உணவுக்கான பிரச்சினை கொழும்பில் மட்டுமல்ல உலகில் அனைத்து இடங்களிலும் ஏற்பட போகிறது.
இதற்காக உலக வங்கி 30 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. உலகம் எதிர்நோக்க போகும் பெரிய பிரச்சினையை எதிர்கொள்ள தாம் தயாராகி வருவதாக அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஜெனட் ஹெலன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படும். சில இடங்களில் உணவு இருக்காது. உலக வங்கி குறிப்பிட்டுள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்று. அடுத்த நாடு ஆப்கானிஸ்தான். தேவையான உணவுகளை பயிரிடுவது தொடர்பாக நாம் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும்.
இதன் காரணமாகவே புதிய வரவு செலவுத் திட்டத்தை கொண்டு வந்து நிவாரணமாக பணத்தை வழங்க நான் எதிர்பாரக்கின்றேன். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தை நாம் ஒன்றிணைந்து செய்வோம்.
காணப்படும் பிரச்சினைகள் என்ன, உணவை பகிர்ந்தளிப்பது, அடுத்து ஏற்பட போகும் பிரச்சினைகளை தீர்க்க அனைவரும் இணைந்து செயற்படுவோம். உணவு பிரச்சினையை தீர்க்க மாவட்ட மட்டத்தில் குழுக்களை நியமிப்போம்.
கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவிகள் தேவை. வெறுமையாகக் காணப்படும் அனைத்து காணிகளிலும் நாங்கள் பயிரிடுவோம். அதனை விவசாய அமைச்சு நிர்வாகம் செய்ய வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
