இலங்கையில் அஸ்ராசெனகா பெறுவதில் குழப்ப நிலை
இலங்கையில் அஸ்ராசெனகா தடுப்பூசி மருந்தை முதல் கட்டமாக பெற்றவர்கள் மத்தியில், இரண்டாம் கட்ட தடுப்பூசி மருந்தைப் பெறுவது குறித்து குழப்பமும் நிச்சயமற்ற தன்மையும் உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முதல் கட்ட தடுப்பூசி மருந்தை கடந்த பெப்ரவரி மாதம் பெற்றுக்கொண்டவர்களுக்கு மிகவும் காலதாமதாக இரண்டாம் கட்ட தடுப்பூசி மருந்து செலுத்தப்படுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று உயிரியல் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் சந்திமா ஜீவந்தர தெரிவித்தார்.
மரபணு மாற்றமடைந்த டெல்ரா வைரஸ் தொற்றில் இருந்து முழுமையான பாதுகாப்பை பெறுவதற்கு இரண்டு கட்ட தடுப்பூசி மருந்துகளையும் பெறுவது மிகவும் அவசியம் என முன்னணி வைத்திய நிபுணரான சந்திமா ஜீவந்தர வலியுறுத்தியுள்ளார்.
இரண்டாம் கட்ட தடுப்பூசி மருந்தைப் பெற்றுக்கொள்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் மேலும் காலதாமதம் செய்யாமல், தயக்கமின்றி இரண்டாவது தடுப்பூசி மருந்தைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் மக்களை அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் அஸ்ராசெனகா மற்றும் கொவிஷீட் தடுப்பூசி மருந்து தொடர்பில் குழம்ப வேண்டாம் எனவும் இரண்டு தடுப்பூசி மருந்துகளும் ஒரே மாதிரியானவையே எனவும் வைத்தியர் சந்திமா ஜீவந்தர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் இரண்டு கட்ட தடுப்பூசி மருந்துகளையும் பெற்றுக்கொள்வதற்கு ஆர்வமாக உள்ளதால், எந்தவிதமான தடுப்பூசி மருந்துகளைப் பெறுவதிலும் பிரச்சினை இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.